முகப்பு.

Tuesday, 24 April 2012

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ..

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அலுவலர்கள் வரும் பொழுது ஜாதிபற்றிய விவரங்களை (உள் ஜாதி உட்பட) சொல்லத் தயங்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியா முழுமையும் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தொடங்கப்பட்டு விட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப் போடு இந்தத் தகவலும் சேகரிக்கப்பட வேண்டும் என்று சமூக நீதியாளர்கள் தரப்பிலிருந்து குரல் ஓங்கியது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று ஓங்கி ஒலித்தனர்.

ஜாதி இருக்க வேண்டும் - அதனை ஒழிக்கவே கூடாது என்று காலம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் உயர் ஜாதி ஆதிக்க சக்திகளோ இத்தகைய கணக்கெடுப்புக் கூடாது என்று வரிந்து கட்டினர்.

இதிலிருந்து இதற்குள் புதைந்திருக்கும் மர்மம் என்ன என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

ஜாதி ஒழிக்கப்படவில்லையே!
ஜாதி ஒன்றும் சட்டப்படி ஒழிக்கப்படவில்லை. மத ரீதியாகவும், சாஸ்திரங்கள் அடிப்படையிலும் ஜாதி, இந்து சமூக அமைப்பில் கெட்டியாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டமும் தீண்டாமை ஒழிப்புப் பற்றிப் பேசுகிறதே தவிர, அதற்கு மூல வித்தான ஜாதி ஒழிக என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அரசு பதிவேடுகளில் சூத்திரன் என்று இருந்தது; அதனை ஒழிப்பதற்குப் பாடுபட்டது - குரல் கொடுத்தது திராவிடர் இயக்கமே.

1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட சூத்திரர்கள் என்ற விவரம் தரப்பட்டு இருந்தது.

1927இல் சென்னையில் கூடிய பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டில் ஜே.எஸ். கண்ணப்பர், அரசு பதிவேடுகளிலிருந்து சூத்திரன் என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் வைத்தார்.

சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்பது உட்பட ஏழு பொருள்களைக் கொண்டது (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்து நடத்தினார் தந்தை பெரியார் (26.11.1957).
ஆனாலும் இன்றளவுக்கும் ஜாதி பாதுகாப்போடு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கத்தான் செய் கிறது.

அரசுக்குத் தேவை புள்ளி விவரங்கள்....
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி (Caste) என்ற சொல் இடம் பெற்றுள்ளது! இந்த ஜாதி முறையால்தான் பெரும்பாலான மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. சமூகத்தில் பிறவியின் அடிப்படையிலேயே ஏற்றத் தாழ்வு - நிலை நிறுத்தப்பட்டது. பிறப்பில் என்ன ஜாதியோ - அதுதான் சுடுகாடுவரை என்ற நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஜாதியின் காரணமாக பல வகை களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர் களைப் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பதன் மூலம் அத்தகையவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை அளிக்க முடியும், அரசின் நல்வாழ்வுத் திட்டங்கள் இத்தகையவர்களுக்கும் போய்ச் சேர சரியான புள்ளி விவரம் தேவைப்படுகிறது.

நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு பற்றிய வழக்குகள் வரும்போது நீதிமன்றம் கேட்கும் முதல் கேள்வி - எந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையில் (Criteria) இத்தனை சதவிகிதம் என்ற வினாவைத்தான் முன் வைக்கின்றது. அதற்காகவும் இந்தப் புள்ளி விவரம் தேவைப்படுகிறது.

ஓர் அரசுக்கு குடிமக்களின் சமூக, கல்வி, பொருளா தாரம், வேலை வாய்ப்பு நிலை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு அடிப்படைப் புள்ளி விவரங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.

ஜாதியை ஒழிக்க ஜாதி விவரம் தேவை!
ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட - கீழ்ஜாதியாக ஆக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கு நூறு படித்தாக வேண்டும்; (சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது மிக முக்கியம்).

அதற்கு ஜாதி பற்றிய புள்ளி விவரம் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஜாதியை ஒழிக்க - இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தேவை. கல்வி வளர்ந் தால்தான் ஜாதி ஒழிய முடியும். மேலெழுந்தவாரியாகப் பார்த்து ஜாதி விவரத்தை சொல்லத் தயங்க வேண்டாம் என்று ஜாதி ஒழிப்பு இயக்கம் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் ஒரு முக்கிய அம்சம் விடுபட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜாதியில் உள் ஜாதி பற்றிய விவரம் கேட்கப்படுவதில்லை என்பதுதான் அந்தக் குற்றச் சாற்று. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்று தொடங்கப்பட்ட பிறகு - அதில் ஏன் இந்த விடுபடல்?

உள் ஜாதி
முதலியார் என்றால் அதில் இடஒதுக்கீடு பெறாத சைவ முதலியார்களும் உண்டு. இடஒதுக்கீடு பெறும் செங்குந்த முதலியார்களும் உண்டு. இதில் வெறும் முதலியார் என்றால் புள்ளி விவரம் சேகரிப்பதன் நோக்கமே அடிபட்டுப் போகிறதே! அதில் எது B.C யோ அதைக் குறிப்பிட்டுப் பதிவு செய்ய வற்புறுத்திடல் வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் உள்ளது. இந்த நிலையில் பொதுவாக தாழ்த்தப்பட்டவர் என்று சொன்னால் அது எப்படி சரியாகும்?

இத்தகைய தவறுகள் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

இந்தியாவில் திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூகநீதி சிந்தனையாளர்களின் அழுத்தமான வலியுறுத்தலின் காரணமாகத்தான் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு சம்மதித்தது என்பதையும் இந்நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

இந்த வாய்ப்பை வீணாக்கி, விழலுக்கிறைத்த நீராக்கி விடக் கூடாது!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Saturday, 21 April 2012

காதல் !

உலகில் காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது காதலிக்கப்படுவதாக மட்டுமே இருக்கும்.

மாசு மருவற்ற அன்பு !


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

Wednesday, 18 April 2012

மாணவர்களின் தொடர் தற்கொலைகளுக்கு காரணம்....

 மாணவர்கள் தற்கொலைகளுக்கு காரணம்..எது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.தன்னால் அடையமுடியாத மருத்துவர், பொறியாளர் தகுதியை தன் குழந்தைகள் அடைந்தே ஆக வேண்டும். சமூகத்தில் தன் மகனோ மகளோ என் மகன் ஒரு பொறியாளர், என் மகள் ஒரு டாக்டர் என்று பெருமை பேசிக்கொள்ள தனது குழந்தையின் விருப்பமும் திறமையையும் ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் , நீ பொறியியல் படி, அதுவும் சாப்ட்வேர் தான் இனி எல்லாமே , அதையே படி, வெறும் M.B.B.S ., போதாது போஸ்ட் கிராஜுவேஷன் பண்ணு அப்பதான் மறியாதை கிடைக்கும் , இப்படி அலையும் பெற்றோர்களால் தற்கொலைகள் அதிகரிக்காமல் வேறு என்ன எதிர்ப்பாக்கமுடியும்?  ஒரு தந்தை தன் மகனுக்கு அறிவுரை சொல்லாமல் அவனுக்கு பாடம் சொல்லிதரும் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தை படிங்க..

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.

Monday, 16 April 2012

மாறுதல் ஒன்றே...


கணிணியும்,
கைப்பேசியும் - வந்தபின்
கலையிழந்து போனது பேனாவும்
தபால் காரர் உத்தியோகமும் !

Sunday, 15 April 2012

குற்றங்கள் குறையனும் !


முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது

-

Sunday, 8 April 2012

தமிழ்புத்தாண்டு - முழு வரலாறு!

தமிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள்.

சித்திரை1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!

இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டி பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.

மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரலக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாம்ல வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாரா,. இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.


தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால் தான் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்கிறோம்.

தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சித்திரை1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால் தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் சோற்றை, "சோறு" எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்,

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"
-பாரதிதாசன்.

Saturday, 7 April 2012

ரெண்டே ரெண்டு ..


மனிதனுக்கு தேவையெல்லாம் இரண்டே இரண்டு தான் ஒன்று அப்பழுக்கற்ற அன்பு மற்றொன்று சின்னதா ஒரு பாராட்டு !